Crime

திருவாரூர்: நன்னிலம் அருகே குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜெயக்குமார் (30), ர.ஹரி ஹரன் (30), மேலத் தெரு சே.மணிகண்டன் (30), முருக்கன்குடி முதல்கட்டளை அ.மணிவேல் (28). இவர்கள் 4 பேரும் நேற்று மாலை நன்னிலத்தை அடுத்த கீழ்குடி பகுதியில் உள்ள புத்தாற்றில் குளிப்பதற்காக காரில் வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. இதனால் 4 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றதால், அனைவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனாலும், அவர்களது முயற்சி பலனளிக்காமல் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JaRsfG6

Post a Comment

0 Comments