Crime

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 17, 18-ம் தேதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதால், பலரும் வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறினர். வீட்டில் எந்த பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க முடியாமல், உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் வெளியேறிய மக்கள், தங்கள் உறவினர்களின் வீடுகள், நிவாரண முகாம்கள், ஓட்டல் விடுதிகளில் தஞ்சம் புகுந்தனர். வெள்ளம் வடிந்த பிறகு மக்கள் தங்கள் வீடுகளுக்கு வரத்தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் மாப்பிள்ளையூரணி பகுதிகளில் மழைநீர் இன்னமும் வடியாமல் நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் பூட்டிக் கிடக்கும் வீடுகளை உடைத்து, திருட்டு சம்பவங்களை அரங்கேற்ற தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி தனசேகர் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஸ்டீபன் என்பவர் மழை வெள்ளம் காரணமாக தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியேறியுள்ளார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த சுமார் 26 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், தனசேகரன்நகர் ஆகிய இடங்களிலும் வீடுகள் உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை வீட்டின் உரிமையாளர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வீடுகளில் என்ன திருடப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1Ky3ftz

Post a Comment

0 Comments