
சென்னை: சென்னை, நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி 12-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்.கே. (54) (ராதாகிருஷ்ணன்). எல்லாம் அவன் செயல், அவன் இவன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அவரது மனைவி ராஜி தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு வழியாக 3 கொள்ளையர்கள் புகுந்து ராஜியை கட்டிப்போட்டனர். பின்னர், அவரை மிரட்டி பீரோவிலிருந்த 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். நீண்ட நேரத்துக்கு பின்னர் வீட்டுக்கு வந்த ஆர்.கே, இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்துஆய்வு செய்தனர். முதல் கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அவரது வீட்டில் வேலை செய்துவந்த நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில் கொள்ளையர்கள் நகை, பணத்துடன் பெங்களூரு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IMZWJC4
0 Comments